Saturday, 16 April 2022

மூழ்கிய மாஸ்க்வா ஏவுகணை கப்பல், உக்ரைன் தாக்கி அழித்ததா



 

 


 கருங்கடல் கப்பல்படையின் முதன்மை போர்க்கப்பல், ரஷ்ய தாக்கும் கப்பல்களிலேயே அதிக ஆயுதங்களை கொண்டது, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் பெயரை தாங்கிய மாபெரும் ஏவுகணை கப்பல், 500-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், பெரிய தானியங்கி துப்பாக்கிகள் கொண்ட இந்த கப்பல் சுமார் 12,000  டன் எடை கொண்டது,  1980 களில் படையில் சேர்க்கப்ட்டு பின்பு 2000 மற்றும் 2010-வது ஆண்டுகளில் நவீனப்படுத்தப்பட்ட இந்த கப்பல் 14 ஏப்ரல் 2022 அன்று கடலில் மூழ்கியது.

உக்ரைன் ராணுவம் இரண்டு நெப்டியூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மூலம் அதை தாக்கி அழித்ததாக கூறியது. 

ரஷ்யா கூறுகையில் கப்பலில் திடீரென தீப்பிடித்ததாகவும்,  அதனால் ஏற்பட்ட வெடி விபத்தில் கப்பல் கடுமையாக சேதம் அடைந்ததாகவும், பின்பு அதை அருகில் உள்ள துறைமுகத்துக்கு இழுவை கப்பல் மூலம் கொண்டு செல்லும்  போது அது மூழ்கிவிட்டது என்றது.

 ஆனால் இரு தரப்புமே அதற்கான ஆதாரங்கள் எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் மாஸ்க்வா கப்பலை தாக்கியதாக முதலில் செய்தி வெளியிட்டது உக்ரைன் ஊடகங்கள் தான், அதன் பின்னரே ரஷ்ய அரசு ஊடகங்கள் தீப்பிடித்ததில் ஆயுதங்கள் வெடித்து கப்பல் கடும் சேதம் அடைந்ததாக  செய்தி வெளியிட்டது.

மாஸ்க்வா கப்பலின் பலம், மற்றும் இரு நாட்டு கூற்றுகளையும் விரிவாக பார்க்கலாம்.

மாஸ்க்வா கப்பலின் பலம்

மாஸ்க்வா கப்பல் கடுமையாக தாக்கும் ஏவுகணைகள், டார்ப்பீடோக்கள் மற்றும் துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், எதிரி ஏவுகணைகள், கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களிலிருந்தும் காக்கும் வகையில் பல்வேறு தற்காப்பு ஆயுதங்களையும் கொண்டுள்ளது.

P1000 Vulkun Missile

இதன் முக்கிய தாக்கும் ஆயுதம் இதன் நவீன P-1000 வல்கன் ஏவுகணைகள்,  மாஸ்க்வா போர்க்கப்பலின் இரு புறமும் நான்கு இரட்டை குழல் ஏவுகணை செலுத்தும் அமைப்புகள் உள்ளது, மொத்தம் 16 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் இதனால் செலுத்த முடியும்.  ஒரு டன் எடையுள்ள வெடி பொருளை சுமக்கும் இந்த ஏவுகணையின் வேகம் மணிக்கு  3500 கிலோமீட்டர், இதனால் சுமார் 800 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள போர் கப்பல் அல்லது நிலத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

 

AK 130 Twin Cannon

அதோடு இதன் பெரிய AK 130 தானியங்கி துப்பாக்கி, நிலத்தில் செல்லும் டாங்கிகளின் முக்கிய பீரங்கி துப்பாக்கிகள் இதில் உள்ளது, அதுவும் இரண்டு குழல்கள், 130 மில்லி மீட்டர் விட்டம் உள்ள இந்த துப்பாக்கிகள் சுமார் 440 ரவுண்டு சுடும், ஒரு நிமிடத்திற்கு 40 குண்டுகள் வரை சுடும், இதனால் 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக சுட முடியும் அதே நேரம் 15 கிலோமீட்டர் தொலைவு வரை இருக்கும் எதிரி போர் விமானங்களை கூட சரியாக குறிவைத்து தாக்கி அழிக்க முடியும்.

533mm Torpedo Tubes

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் விதமாக மொத்தம் 10 டார்ப்பீடோக்களை செலுத்தும் அமைப்பு உள்ளது. 533 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட டார்ப்பீடோக்களை இதன் மூலம் கடலுக்குள் வீசலாம். அது மட்டுமல்லாது 12 குழல்கள் கொண்ட இரண்டு நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளை வீசும் அமைப்பும் உள்ளது. இதன் மூலம் கடலடியில் 1000 மீட்டர் ஆழத்தில் இருக்கும் நீர்மூழ்கிகளை கூட தாக்க முடியும்.

RBU 6000 ASW Rockets

மோஸ்க்வா கப்பலின் பாதுகாப்பு அமைப்புகள்

S-300 ஏவுகணை வீசும் குழல்கள்
 

இந்த கப்பலின் முதன்மை பாதுகாப்பு அமைப்பு அதன் S300  வான் பாதுகாப்பு ஏவுகணை தான், மொத்தம் இதில் 64 S300 ஏவுகணைகள் உள்ளது, இதம் மூலம் கப்பலை தாக்க வரும் எவ்வித போர் விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள், ஹெலிகாப்டர்களையும் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலேயே தாக்கி அழிக்க முடியும். இதன் ஏவுகணைகள் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கூட தாக்கி அழிக்க வல்லவை. 

OSA M

அதற்கு கூடவே 40 குறுகிய தூரம் (20 கிலோமீட்டர் தாக்கும் திறன் ) செல்லும் OSA M  வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் உள்ளது. இது மிக தாழ்வாக பறக்கும் ஏவுகணைகள், கப்பல் அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் சிறிய ஆளில்லா உளவு விமானங்கள் ஆகியவற்றை தாக்கி அழிக்கும். 

AK 630 CIWS


அதற்கு அடுத்தபடியாக CIWS என்னும் கப்பல் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்பு, பொதுவாக கப்பல்களில் இரண்டு அல்லது நான்கு AK 630 எனப்படும் பழகுழல் துப்பாக்கிகள் இருக்கும், இவை மிக வேகமாக சூடுபவை. இதன் வேகம் ஒரு நிமிடத்துக்கு சுமார் 5000 குண்டுகள், 30mm விட்டம் கொண்ட இந்த பல குழல் துப்பாக்கியில் 2000 குண்டுகள் இருக்கும், அதை அனைத்தையும் சுமார் 40 வினாடிகளில் சுட்டு தீர்த்துவிடும். மூழ்கிய இந்த மாஸ்க்வா போர் கப்பலில் இது போன்ற துப்பாக்கிகள் ஆறு உள்ளது. எதிரி ஏவுகணைகளிலிருந்து தப்பிக்க இந்த வேகமாக சுடும் துப்பாக்கிகள் பயன்படும். கூடவே அனைத்தும் சுட்டால் கப்பலை சுற்றி துப்பாக்கி குண்டுகளால் ஆன ஒரு இரும்பு வளையத்தை உருவாக்கி விடும்.

இதன் கூடவே, எதிரி ராடார்களை குழப்ப சாப் எனப்படும் அமைப்பு, அதிக அளவு புகை எழுப்பும் அமைப்பு,

அது மட்டுமல்லாது கணிப்பொறியால் கட்டுப்படுத்தப்படும் எதிரி ரேடார்களை செயலிழக்க செய்யும் அமைப்பு.

Ship's Smoke screen


இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த கப்பலை உக்ரைன் தாக்கி அழித்தோம் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை என்று நினைக்கலாம். ஆனால் உக்ரைன் எவ்வாறு அழித்தது பயன்படுத்திய கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, டிரோன்  ஆகியவற்றை பார்த்து அதன் கூற்று எவ்வாறு உள்ளது என்று காணலாம்.

உக்ரைன் என்ன சொல்லுகிறது 

உக்ரைன் ரஷ்ய போர் கப்பலை தாக்கி அழிக்க பயன்படுத்திய ஏவுகணையின் பெயர் நெப்டியூன், இது தரையிலிருந்து ஏவி போர்கப்பல்களை தாக்குமாறு வடிவமைக்கப்பட்டது, முற்றிலுமாக உக்ரைன் நாட்டிலேயே இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது. 2015-இல் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நவீன ஏவுகணை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு தான் முறையாக உக்ரேனிய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

Neptune Anti Ship Missile (Coastal Battery )

நவீன போர்க்கப்பல்களின் ராடார்களின் கண்ணை மறைத்து, அதன் ஜாமிங்கிலிருந்து தப்பி, மிக தாழ்வாக பறந்து போர் கப்பல்களை தாக்குமாறு இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் தாக்கும் தொலைவு சுமார் 300 கிலோமீட்டர் என்றாலும், அதன் வேகமும் மணிக்கு 900 கிலோமீட்டர் தான். அமெரிக்காவின் நவீன LRASM நார்வே நாட்டின் NSM போன்ற ஏவுகணைகளும் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் பெய்ராக்டர் ஆளில்லா தாக்கும் விமானத்தை கப்பல் இருக்கும் இடத்துக்கு அனுப்பி கப்பலின் மொத்த பார்வையையும் இந்த உளவு விமானம் மூலம் ஈர்த்ததாகவும், அதே நேரம் நெப்டியூன் ஏவுகணையை கப்பலை நோக்கி செலுத்தி திடீரென தாக்கியதாகவும் உக்ரைன் தெரிவித்தது.


 

Bayraktar TB2 ( Ukraine Navy )

தாக்குதல் நடந்த போது, மாஸ்க்வா போர் கப்பல் உக்ரைன் நாட்டின் ஒடிசா நகரிலிருந்து சுமார் 60  கிலோமீட்டர் தூரத்தில் தான் இருந்தது. ஒடிசா கடற்கரை நகரிலிருந்து தான் ஏவுகணையை வீசியதாக உக்ரைன் தெரிவித்தது.

இதிலிருக்கும் உண்மைகள்


1. பெயராக்டர் டிரோன்கள் தொடர்ச்சியாக கருங்கடல் பகுதியில் உள்ள ரஷ்ய போர்கப்பல்களை வேவு பார்த்துக்கொண்டு தான் இருந்தன, அதற்கு சாட்சியாக கடந்த 13-ம் தேதி தான் கருங்கடல் மீது பறந்த உக்ரைன் நாட்டின் டிரோன் ஒன்றை தாக்கி அழித்ததாக வீடியோ வெளியிட்டது ரஷ்ய கப்பல் படை.  ஆதாரம்



2. பெயராக்டர் டிரோன்கள் அர்மீனியாவிலும், லிபியாவிலும், உக்ரைனிலும் நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மீது பறந்து அதை தாக்கி அழித்துள்ளது.

3. பெயராக்டர் டிரோன் மாஸ்க்வா போர் கப்பல் அருகே பறந்து அதன் ரேடாரை தனது பார்வைக்கே வைக்க ரஷ்ய கப்பல் படை வீரர்களை தூண்டியிருக்கலாம்.

4. சம்பவம் நடந்த நாளில் அப்பகுதியில் கடல் நிலை மோசமாக இருந்தது, கூடவே காற்றும் பெரிய அலைகளும் இருந்தது.

5. மாஸ்க்வா கப்பல் ஒடிசாவுக்கு அருகே அதாவது 60  கிலோமீட்டர் தூரத்தில் தான் இருந்தது, ஏவுகணை அந்த தூரத்தை அடைய வெறும் 4 நிமிடங்கள் தான் ஆகியிருக்கும், தாழ்வாக பறக்கும் ஏவுகணைகளை நவீன ராடார்களால் கூட கண்டறிவது கடினம், இது போன்ற தாழ்வாக பறக்கும் ஏவுகணைகளை நவீன ராடார்களே 50 கிலோமீட்டர் அருகே வரும்போது தான் கண்டறியும். கூடவே காற்றும் பெரிய அலையும் இருப்பதால், ஏவுகணையை ரேடாரால் கண்டறிவது இன்னும் கடினமாகும். அதே நேரம் ஏவுகணைக்கு டிரோன்  மூலம் இலக்கின் இடம் துல்லியமாக கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு வேளை ஏவுகணை ஏவும்போது அங்கிருந்த வேறு ரஷ்ய கப்பல் கண்டுபிடித்திருந்தாலும், அதனால் அடுத்த கப்பலுக்கோ தலைமைக்கோ உடனடியாக தெரிவிக்க முடியாது, இதற்கு முதல் காரணம் அது கப்பலின் இருப்பிடத்தை எதிரிக்கு காட்டி கொடுத்து விடும், இரண்டாவது அங்கு பறந்து கொண்டிருக்கும் நாட்டோ நாடுகளின் அதி நவீன உளவு விமானங்கள், அவை தொடர்ந்து ரஷ்ய தகவல்தொடர்பை இடைமறிக்கவும் கூடவே அதை ஒட்டுக்கேட்கவும் செய்கிறது.

6. மாஸ்க்வா போன்ற பெரிய ஏவுகணை கப்பல்கள் பொதுவாக போர் நேரத்தில் அனைத்து ராடார் அமைப்பையும் நிறுத்தி வைக்கும், இதனால் எதிரியால் கப்பலின் இருப்பிடத்தை கண்டறிவது கடினம், இருந்தாலும் இந்த மாஸ்க்வா அதன் வழிகாட்டும் ரேடாரை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு அதிகம்.

7. இந்த சம்பவம் நடந்த உடனேயே ஆக்கிரமிப்பு கிரிமியாவில் உள்ள செவஸ்தாபோல் கப்பற்படை தளத்தின் இருந்த போர் கப்பல்கள் அனைத்தையும் அங்கிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோவோரோசியாக் கப்பல் படை தளத்துக்கு செல்ல கட்டளையிட்டுள்ளது ரஷ்யா கப்பல் படை.

மேற்கண்ட கூற்றுப்படி பார்த்தல் இதை உக்ரைன் நாட்டின் நெப்டியூன் ஏவுகணைகள் தாக்கி அழித்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

ரஷ்யா என்ன கூறுகிறது


1. 14-ம் தேதி கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, அந்த தீ பரவி அங்கிருந்த ஏவுகணைகள் மேல் பட்டு ஏவுகணைகள் வெடித்ததில் கப்பல் பெருத்த சேதத்துக்கு உள்ளானது. கப்பலை வீரர்கள் கைவிட்டு தப்பவும் கட்டளையிடப்பட்டது, கப்பலின் அனைத்து வீரர்களும் மீட்கப்பட்டனர் என்றும் ரஷ்ய அரசு செய்தி வெளியிட்டது

2. பிறகு வெளியிட்ட செய்தியில், கப்பலின் தீ அணைக்கப்பட்டு விட்டது, ஏவுகணைகளின் வெடிப்பும் நிறுத்தப்பட்டு, இழுவை கப்பல் மூலம் கப்பலை செவஸ்தாபோல் துறைமுகத்துக்கு கோட்னு வருவதாகவும் கூறியது.

3.  அடுத்த செய்தி குறிப்பில், கடும் சீற்றமான அலை மற்றும் மோசமான வானிலை காரணமாக கப்பலை இழுத்து வரும் வழியில் அது மூழ்கியதாகவும் கூறியது ரஷ்யா.


மேற்கண்ட கூற்றுப்படி பார்க்கும்போது, அவ்வளவு நம்பும் படியாக இல்லை,  காரணம்

1. செய்திகளின் படி ஒரு துருக்கிய கப்பல் மோஸ்க்வா போர் கப்பலின் வீரர்கள் 54 பேரை காப்பாற்றியதாக கூறியது.

2. கப்பலில் தீ பிடிப்பது சாதாரண விஷயம், அது மூழ்கும் நிலைக்கும் செல்லலாம், ஆனால் தீ அணைக்கப்பட்டு விட்டது இழுத்து வரும் வழியில் மூழ்கியது என்பது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாது, அப்படியெனில் கப்பல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அதன் முக்கிய உடல்பாகத்தில் பெரும் ஓட்டை இருந்திருக்கலாம்.

அதோடு உக்ரைன் நாட்டின் நெப்டியூன் ஏவுகணை தான் கப்பலை தாக்கி அழித்ததாக அமெரிக்காவின் பென்டகனும், லித்துவேனியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும்  உறுதிப்படுத்தியுள்ளது

எப்படியானாலும் உக்ரைன் மீது கட்டவிழ்த்துள்ள இந்த போரால் ரஷ்யா இழந்த மற்றொரு கிரீடம், அதன் மாபெரும் ஏவுகணை போர்க்கப்பல் அதோடு சுமார் 400 கப்பல் படை வீரர்கள்.